Wednesday, September 19, 2018

வேட்டுவர் குடியைச் சேர்ந்த ஊராளிகள்

வேட்டுவ குடியை சேர்ந்த ஊராளிகள் (சீறூர் மன்னர்கள் மற்றும் தண்ணடை மன்னர்கள் )

சங்க இலக்கியங்களில்  முல்லை மற்றும் மருத நில ஊர்களை ஆண்டவர்களை சீறூர் மன்னர் ,தண்ணடை மன்னர் என்று அழைக்க பட்டனர் .இவர்களை கல்வெட்டுகளில் ஊராளி என்றும் ஊரும் ஊராளிகள் என்றும் அழைக்கப்பட்டனர் .

புறநானூற்றின் 285ஆம் பாடல் முதல் 335ஆம் பாடல் வரை சீறூர் மன்னர் பற்றிக் குறிப்பிடுகின்றன. சீறூர் மன்னர் ஆண்ட நிலப்பகுதி,
பருத்தி வேலிச் சீறூர் மன்னர் (புறம். 299:1)
சீறூர் மன்னன் சிறியிலை எஃகம் (புறம் 308:4)

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,

நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர் (புறம் 302:7 )
பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்
புன்புலம் தழீஇய அம்குடிச் சீறூர் (புறம் 324:7-8)

எனவும் இவர்கள் ஆண்ட நிலப்பகுதி குறிக்கப்பட்டுள்ளது.

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்த மரபில் கல்லொடு புணரச்
சொல்லப்பட்ட எழுமூன்று துறைத்தே (தொல்.பொருள்.புறத்.5:19 – 21)

எனக் கல்நடும் நடைமுறையைக் குறிப்பிட்டுள்ளார் தொல்காப்பியர்.

சங்க இலக்கியங்களில் நடுகல் வழிபாடு குறித்த செய்திகளைப் பரவலாகக் காணமுடிகிறது.

நிரம்பா நோக்கின் நிரயம் கொண்மார்
நெல்லி நீளிடை எல்லி மண்டி
நல் அமர்க் கடந்த நாணுடைமறவர்
பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலைநடுகல்
வேல் ஊன்று பலகை வேற்றுமுனை கடுக்கும் (அகம். 67: 6 – 11)

எனும் பாடலடிகள், ஆநிரைகளை மீட்க வேண்டி வெட்சி வீரருடன் போரிட்டு வென்று வீரமரணமடைந்த வீரர்களது பெயரும் புகழும் பொறிக்கப்பட்ட கற்கள் மயில் தோகை சூட்டப்பட்டு நிற்க, அக்கற்களுக்கு முன் வேலும் கேடயமும் சார்த்தி வைக்கப்பட்டிருந்த நிலையைக் குறிப்பிடுகின்றன.

வீளை அம்பின் விழுத்தொடை மழவர்
நாள்ஆ உய்த்த நாமவெஞ்சுரத்து
நடைமெலிந்து ஒழிந்த சேண்படர் கன்றின்
கடைமணி உகுநீர் துடைத்த ஆடவர்
பெயரும் பீடும் எழுதி, அதர் தொறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்
வேல் ஊன்று பலகை வேற்றுமுனை கடுக்கும்
வெருவரு தகுநகானம் ‘நம்மொடு
வருக என்னுதி ஆயின்
வாரேன்; நெஞ்சம்! வாய்க்கநின் வினையே (அகம் 131:6 – 15)

எனும் பாடலடிகள், ‘நாம் கடந்து செல்லும் காடோ, சீழ்க்கை ஒலி பொருந்திய அம்பினது தப்பாத தொடையினையுடைய வெட்சி சூடின மறவர்கள், விடியற்காலையில் பசுக்கூட்டத்தைக் கவர்ந்து கொண்டு போகும் அச்சம் தரும் கொடிய பாலை வழியினைக் கொண்டது. வேட்சியாருடன் போரிட்டு ஆநிரைகளை மீட்டுவரச் சென்ற கரந்தையார் அச்சுரவழியைக் கடந்து நெடுந்தூரம் நடந்து வந்தமையால் தம் தாயாருடன் செல்லமாட்டாது நடைதளர்ந்து நின்றுவிட்ட கன்றுகளின் கண்ணின் கருமணியின் கடையினின்றும் சிந்துகின்ற நீரைத் துடைத்து அவற்றின் துயரைப் போக்கினர். நிரைமீட்ட போரில் இறந்துபட்ட கரந்தையோரின் பெயரும் பெருமையும் பொறித்து, மயிற்பீலி சூட்டப்பெற்று விளங்கும் சிறப்பினைக் கொண்ட நடுகல்லின் முன் ஊன்றிய வேலும், அதன்கண் சார்த்தப்பெற்ற கேடயமும் செல்லும் வழிதோறும் வேந்தரது போர்முனையை ஒத்துக் காணப்படும் அச்சம் எழும் இயல்பினை உடையது  என விளக்கி நிற்கின்றன.

சீறூர் மன்னர் நடுகல் வழிபாட்டை முதன்மையாகக் கொண்டிருந்ததையும் நடுகல் அன்றி வேறு தெய்வங்களை வழிபடாப் பண்புடையார் என்பதையும் மாங்குடி கிழாரின் மூதின்முல்லை துறையிலமைந்த,

ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தென
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே (புறம்.335: 10 – 12)

எனக் குறிப்பிடுகிறது. இந்த அடிப்படையில்,

நடுகல் பிறங்கிய உவல் இடுபறத்தலை
புன்காழ் நெல்லி வன்புலச் சீறூர் (புறம் 314: 3 - 4)

என நடுகற்கள் நிறைந்திருந்த சுடுகாட்டை உடையதாகச் சீறூர் சுட்டப்படுகிறது.

வேந்துவிடுதொழில்:
புன்புல வேளாண்மையால் கிடைக்கும் வரகு, தினை, அவரை முதலான தானியங்ககள் மற்றும்  வேட்டையின் வாயிலாகக் கிடைக்கும் பொருளைக் கொண்டதான சீறூர் மன்னர் சமுதாயம் வறுமை காரணமாக வேந்துவிடுதொழிலில் ஈடுபட்டமையைப் புறநானூற்றுப் பாடல்கள் விளக்குகின்றன.

வேந்து தொழில் அயரும் அருந்தலைச் சுற்றமொடு ( புறம்.285 : 7)
……… வேந்தனொடு      
நாடுதரு விழுப்பகை எய்துக (புறம்  306: 6 - 7)
சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர்  
வேந்துவிடு தொழிலொடு சென்றனன்(புறம்  319: 12 - 13)

என வேந்துவிடுதொழிலை மேற்கொண்ட சீறூர் மன்னர், அத்தொழிலின் வாயிலாக நெல், பொன், யானையின் முகபடாம் போன்ற பலவற்றைப் பரிசிலாகப் பெற்று வந்ததையும் பாடல்கள் காட்டுகின்றன.

பெருஞ்செய் நெல்லின் அரிசி ஆர்ந்து,தன்
புன்புறப் பெடையொடு வதியும்
யாணர்த்து ஆகும் - வேந்து விழுமுறினே (புறம்  318: 7 - 9)

எனும் பாடலடிகள் பெரிய நெல் வயல்களில் விளைந்த நெல்லை உண்ட தன்னுடைய புல்லிய முதுகுப் பகுதியையுடைய பெண் குருவியுடன் தங்குவதற்கு இடனாகிய, வேந்துவிடு தொழிலில் கிடைக்கும் புதுவருவாய் உடையதாகும் ஊர் எனக் குறிப்பிடுகின்றனர்.

சிறிய ஊரின் மன்னன், வேந்தனால் ஏவப்பட்ட தொழிலை ஏற்றுப் பகை மேற்சென்றனன். அவன் போரில் வெற்றியுடன் திரும்பி வந்து உன்னுடைய பாணிச்சி பொன்னரி மாலை அணிய, உனக்கு வாடாத பொன் தாமரைப் பூவினைத் தலையில் பரிசாகச் சூட்டுவான் எனப் பாணரிடம், சீறூர் மன்னனின் மனைவி குறிப்பிடுவதை,

சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர்
வேந்துவிடு தொழிலொடு சென்றனன் வந்துநின்
பாடினி மாலையணிய
வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே (புறம்  319: 12 - 15)

எனும் பாடலடிகள் காட்டுகின்றன.

அருஞ்சமம் ததையத் தாக்கி பெருஞ்சமத்து
அண்ணல் யானை அணிந்த
பொன்செய் ஓடைப் பெரும் பரிசிலனே (
புறம்  326: 13 - 15)

எனும் பாடலடிகள் சீறூர் மன்னன் வேந்துவிடு தொழில் முடித்து யானையின் முகபடாம் பெற்று வந்ததைக் காட்டுகின்றன.

அரசனால் வென்றளிக்கப்பட்ட சிறந்த பொருள்களைத் தனக்கென வைத்துக்கொள்ளாது பரிசிலர்க்கு எந்நாளும் குறையாமல் தருகின்ற வள்ளண்மையுடைய புகழமைந்த தகுதியுடையவன் சீறூர் மன்னன் என்பதை,

வேந்து தரு விழுக்கூழ் பரிசிலர்க்கு என்றும்
அருகாது ஈயும் வண்மை
உரைசால் நெடுந்தகை ஓம்பும் ஊரை (புறம்  320: 16 - 18)
எனும் பாடலடிகள் காட்டுகின்றன.

வேந்துவிடு தொழிலுக்காட்பட்டு, அத்தொழிலின் வாயிலாகப் பெற்றவற்றைப் பாணர்க்கும் பலர்க்கும் வழங்கிய சீறூர் மன்னரின் இத்தகைய இயல்பு அவர்தம் குடிமைப் பண்பால் விளங்கக் காணலாம்.

சீறூர் ஊராளிகள் (சீறூர் மன்னர் )வேந்துவிடு தொழில் மூலம் தண்ணடை (மருத நிலத்தை ஊர் ) பெற்று  தண்ணடை ஊராளிகளாக (தண்ணடை மன்னர் ) மாறினார்கள் .

No comments:

Post a Comment